வேட்டுவர் அரசன் மொக்காளி வேட்டுவர் சோழங்க தேவன் குறுப்பு நாட்டு விசையமங்கலத்தை(விஜயமங்கலம்) சேர்ந்த வீர கல் வெட்டு கண்டுபிடிக்க பட்டது

  • Posted on Wed Feb 9, 2022
  • 805 Views



கொங்கு நாட்டின் வடக்கு எல்லையை வரையறுக்கும் பண்டைய இலக்கியப் பாடலுக்கு வலுசேர்க்கும் நடுகல் கல்வெட்டு

கொங்கு மண்டல சதகம் நூல் கொங்கு நிலத்தின் நான்கு திசைகளின் எல்லையை ஒரு பாடலில்  பெயர். கார்மேகக்கவிஞர், கொங்கு நிலத்தின் நான்கு எல்லைக்குட்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் கொண்டு அகப் புறப் பாடல்கள் நூறு படைத்ததால் அந்தநூல் “கொங்கு மண்டல சதகம்” எனப் பெயர்பெற்றது. 

இந்த சதகம் நூல் விவரிக்கும் எல்லைப் பாடல்;

‘மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழநி மதிகுடக்குக்

கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின் வடக்கு

விதித்துள நான்கு எல்லை சூழ வளமுற்றும் மேவி விண்ணோர்

மதித்திட வாழ்வு தழைத்திடு நீள் கொங்கு மண்டலமே”

 

கிழக்கே குளித்தலை அருகிலுள்ள மதிற்கரையும்;அது கரூர் மாவட்டத்தில் உள்ளது.

மேற்கே வெள்ளி மலை; கோவை மாவட்டத்தின் பேரூருக்கு சில கிமீ மேற்கில் உள்ள வெள்ளியங்கிரி மலை.

தெற்கில் பழனிமலை; அது இன்றைய திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.

வடக்கே பெரும்பாலை; காவிரிக் கரையிலிருந்து வடக்கே இருபது கிமீ தொலைவிலுள்ள இடம். கிழக்கு தொடர்ச்சி மலையின் குன்றுகளும் மேய்ச்சல் காடுகளும் சூழ்ந்தப் பரப்பாகும்.

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூரும் அதன் சுற்றுவட்டார மலைக்குன்றுகளும் உயரம் குறைவான அதேசமயம் உயிர்ச்சூழல் செறிவுமிக்க வனவளங்களை கொண்டிருக்கும் பகுதிகளாகும். குன்றுகளை ஒட்டி பரந்துபட்ட அளவிலான மேய்ச்சல் காடுகளை இன்றும் காணலாம். போக இந்தப் பகுதியானது கங்கபாடி நாட்டிலிருந்து கொங்கின் உட்பகுதிக்கு நுழையக்கூடிய வழிதடத்தில் காவிரியை கடக்கும் முன்பாக முக்கிய வழி சந்திப்பாகவும் இருந்ததென்றும் கூறமுடியும். மேச்சேரி, மேட்டூர் பகுதிகளில் இரும்பு கனிம வளங்கள் அப்போது மிகுதியாக கிடைத்தது. இப்பகுதியில் இரும்புத் தாதுக்கள் கொண்டு எஃகு பொருட்கள் தருவிக்கும் தொழிற்நுட்ப அறிவைப் பெற்றிருந்த கலைஞர்கள் வாழ்ந்தனர் என்பதை பேராசிரியர் க. ராஜன் தனது தெலுங்கானூர் அகழாய்வு ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார். மேய்ச்சல் காடுகள் ஒருபுறம், இரும்பு தாதுக்கள் வளம், தொழிற்நுட்பம் மறுபுறம் என தொடர்ச்சியாக மக்கள் நடமாட்டத்தை அனுமதித்த நிலமாக இப்பகுதி இருந்துள்ளது. கொங்கு நாட்டினை பொறுத்தவரை இப்பகுதியை தன் நிலவியலோடு வைத்திருக்க வேண்டியதன் அவசியம் வலுவானது. இப்பகுதியினை கடந்தால் பென்னாகரம், அஞ்சட்டி கணவாய் வழியாக கர்நாடகாவின் உட்பகுதிக்குள் நுழைந்து விடலாம். அதன் பொருட்டே கொங்கு மண்டல சதக நூல் இதனை வடக்கு எல்லையாக குறிப்பிடுகிறது.

 

யாக்கை தன்னார்வ அமைப்பின் சார்பில் தர்மபுரி மாவட்ட நடுகற்களை ஆவணப்படுத்தும் நோக்கில் சென்றிருந்தபோது பெரும்பாலை நடுகல் கல்வெட்டினை படியெடுத்து படிக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்த நடுகல் சமூக வலைத்தளங்களில் சிலரால் பகிரப்பட்டபோதும் அதன் கல்வெட்டு தரவுகள் எங்கும் பதிவாகவில்லை என்பதால் கல்வெட்டினை முழுமையாக ஆய்வு செய்தோம். போசாளர் மரபின் வீரவல்லாளன் காலத்தில் பெரும்பாலைக்கு அருகில் இருந்த பவழந்தூர் என்ற ஊரினை, கண்டியதேவர் என்பவர் கைப்பற்றும் நோக்கில் படையுடன் வந்து அழிவு உண்டாக்கி சென்றுள்ளார். அப்போது இங்கு ஆட்சியில் இருந்தவர் செம்போந்தியாக பெருமான். இவரின் வேண்டுகோளை ஏற்று குறுப்பு நாட்டு வேட்டுவ அரசன் விசையமங்கலத்தை(விஜயமங்கலம்) சேர்ந்த மொக்காளி வேட்டுவர் சோழங்க தேவன் என்பவர் கண்டியதேவரையும் அவர்தம் வீரர்களையும் குதிரைகளையும் அழித்து போர் களத்திலே இறந்துள்ளார். அவரது வகையறாக்களுக்கு பெரும்பாலை பகுதி மலை, நிலம் அனைத்தையும் நிர்வகிக்கும் காணியாட்சி உரிமை தரப்பட்டதை கல்வெட்டின் வழி அறிகிறோம். காணியாட்சி என்ற சொல் அந்த நிலத்தின் மீதான முழுநிர்வாக உரிமையை சுட்டுவது.

 

இருபத்தியாறு வரிகள் கொண்ட கல்வெட்டு பூசல் நிகழ்வை தத்ரூபமாக விவரிக்கிறது. கொங்கில் இருபத்தி நான்கு நாட்டு பிரிவுகளில் ஒன்றான குறுப்பு நாட்டுப் பிரிவிலிருந்து ஒரு சமூகத்தவர் பெரும்பாலை பகுதியில் காணியாட்சி உரிமை பெற்றது வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த சமூக அரசியல் நிகழ்வாகும். இக்கல்வெட்டில் சித்திரை மாசம், பூர்வ நட்சத்திர நாளான திங்கட்கிழமை என்று காலக் குறிப்புகள் தெளிவாக இடம் பெற்றுள்ளன. மேலும் “மத்தளி விகாரண சூரியன், கட்டுக்குள் அடங்காத சிங்கன், மலைகள் கலங்கினாலும் மனம் கலங்காத கண்டன் சோழங்க தேவன்” என்று இறந்த வீரனை அவன் வாழ்ந்த காலத்தின் வீரசிறப்புகளை கூறி விவரிக்கிறது கல்வெட்டு வாசகம். அருகில் இரண்டு தனிக் கற்களில் காட்சி சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒன்றில் குதிரையின் மீதேறி வரும் பகைவரை வீரன் எதிர்கொண்டு தாக்குவது போலவும் மற்றொன்றில் பகைவரில் ஒருவரைக் கொன்று விட்டு மற்றொருவரை எதிர்கொள்வது போலவும் சிற்பக் காட்சிகள் உள்ளன. வடஎல்லை தற்போது தர்மபுரி மாவட்டத்தில் நிர்வாக ரீதியாக இணைந்துள்ளது. பெரும்பாலை பகுதியானது தொல் பழங்காலத்தில் இருந்தே மக்கள் வாழ்ந்ததற்கான தொன்மையான சான்றுகளைக் கொண்டிருக்கும் பகுதி. இதன் முக்கியத்துவம் கருதியே வருகின்ற ஆண்டில் இங்குள்ள பண்டைய வாழ்விட மேட்டில் அகழாய்வுகள் மேற்க்கொள்ளப்படுமென தமிழகத் தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொங்கின் மற்ற மூன்று திசை எல்லைப்பகுதிகளிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. அவை தமிழக தொல்லியலுக்கு பெருவளம் சேர்த்தன. இன்னும் ஒருபடி மேலான தரவுகளை தரவல்ல பகுதியே பெரும்பாலை. அந்த நிலம் தன்னுள் வைத்திருக்கும் தொல்மாந்தர் எச்சங்களை வருங்கால அகழாய்வுகள் வெளிப்படுத்தட்டும்.

 கொங்கின் வடஎல்லை குறித்து இருவேறு கருத்துக்கள் உண்டு. கொங்குமண்டல சதக நூலில் பாடபேதம் உண்டு எனவும் தலைமலை தான் வடஎல்லை எனக் கருதுவாரும் உண்டு. இலக்கியங்களை காட்டிலும் கல்வெட்டுகள் உறுதியான வரலாற்று சான்றுகளாகும். தலைமலை தாண்டிய நிலப்பரப்பிலும் கொங்கின் நிர்வாக நாட்டுப் பிரிவின் பெயர் தாங்கிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக தாளவாடி, சாம்ராஜ் நகர் வரையிலும் உடுவாங்க நாடு, எண்ணைய் நாடு, வாழக்கை நாடு என உட்பிரிவுகள் பெயர்கொண்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால் பெரும்பாலை நிலப்பரப்பை அடுத்துள்ள தகடூர் நாட்டு கல்வெட்டுகளில் கொங்கின் நாட்டுப்பிரிவினை குறித்து எங்கும் வரவில்லை. அவை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து கங்கநாட்டு நாட்டு தகடூர் நாடு என்றே சோழர்கால கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றன. அங்கு கிடைக்கும் கங்கர், பல்லவர், நுளம்பர் கால கல்வெட்டுகளிலும் கொங்கு நிலம் பற்றியக் குறிப்புகள் இல்லை.

–    குமரவேல் ராமசாமி

நன்றி: முனைவர் இராசகோபால் சுப்பையா, கல்வெட்டு அறிஞர். (கல்வெட்டு படித்து உறுதி செய்தவர்)

நன்றி: உடன் பயணித்த யாக்கை தன்னார்வ அமைப்பின் நண்பர்கள் ( அருண் ராஜா, சந்திரன், சிற்றிங்கூர் ராஜா, மகேந்திரன் )